தேசப்பற்றை எழுத்தின் மூலமாகவும் பேச்சின் மூலமாகவும் இசை முதலான கலைகளின் வழியாகவும் நாட்டு மக்களிடம் சேர்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.அவருடைய இந்த எண்ணத்தின் வெளிப்பாடே `நாட்டுக்கொரு பாட்டு'. இதில் 44 நாடுகளின் தேசியகீதங்களை தமிழில் மொழிபெயர்த்திருந்தார். `செங்கோட்டை முழக்கங்கள்' என்னும் இந்தத் தொகுப்பிலும் தேசப்பற்று மிளிர்கிறது.உலகின் மிகப் பெரிய ஜனநாயக குடியரசு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 75 ஆண்டுகாலத்தில் சுதந்திர இந்தியா கடந்து வந்திருக்கும் பிரச்சினைகளையும் சோதனைகளையும் இந்தியாவின் பிரதமர்கள் எப்படி எதிர்கொண்டார்கள், தடைக் கற்களை படிக்கற்களாக்கி இந்தியாவை முன்னேற்றுவதற்கு எப்படி பாதை அமைத்தார்கள் என்பதையெல்லாம் அந்தந்த காலகட்டத்தில் பதவி வகித்த பிரதமர்கள் தங்களின் சுதந்திர நாள் உரைகளின் வழியாக மக்களிடம் சேர்த்தார்கள் என்பதை மனதுக்கு மிகவும் நெருக்கமாகப் பதிவு செய்கிறது இப்புத்தகம். செங்கோட்டையில் சுதந்திர நாளில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு முதல் பி.வி.நரசிம்மராவ் வரை, வெவ்வேறு காலகட்டத்தில் முதல் 50 ஆண்டுகளில் பிரதமர்கள் ஆற்றிய உரைகளை சீரிய முறையில் தொகுத்திருக்கிறார் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி. பிரதமர்களின் உரை பெரும்பாலும் ஆங்கிலம் அல்லது இந்தியில் இருக்கும். காற்றில் கரைந்திருக்கும் அந்த எழுச்சி உரைகளை, நேர்த்தியாக தமிழில் மொழிபெயர்த்து எழுத்தில் வடித்து ஆவணப்படுத்தியிருக்கிறார் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.
“ஒவ்வொருவரின் கண்ணில் இருக்கும் ஒவ்வொரு துளி கண்ணீரையும் துடைப்பதுதான் நமது லட்சியம்” என்று முழங்கிய நேருவின் உரையில் வெளிப்பட்ட நெகிழ்ச்சி, லால் பகதூர் சாஸ்திரியின் உரையில் வெளிப்பட்ட உறுதி, இந்திரா காந்தியின் உரையில் வெளிப்பட்ட புரட்சி, மொரார்ஜி தேசாயின் உரையில் வெளிப்பட்ட ஒற்றுமை உணர்வு, ராஜீவ்காந்தியின் உரையில் வெளிப்பட்ட வலிமையான நவீன இந்தியா, வி.பி.சிங்கின் உரையில் வெளிப்பட்ட மக்களுக்கான உரிமை, பி.வி.நரசிம்மராவின் உரையில் வெளிப்பட்ட புதிய பொருளாதாரம் போன்ற முன்னெடுப்புகள் அனைத்தும் பதிவாகியிருக்கும் தொகுப்பு இது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்தியாவை ஆண்ட பிரதமர்கள் எத்தகைய நல்ல திட்டங்களை தொலைநோக்குடன் கொண்டுவந்திருக்கிறார்கள் என்பதை இந்தத் தலைமுறைக்குச் சொல்வதில்தான் இந்தப் பெரும் பணியின் முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது.